பூஜித், ஹேமசிறியின் விளக்கமறியல் நீடிப்பு

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவின் விளக்கமறியல் நீடிப்பு

by Staff Writer 17-12-2019 | 1:22 PM
Colombo (News 1st) கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமறியல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் சந்தேகநபர்களை ஆஜர்படுத்தியபோது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரான ரஞ்சித் மத்தும பண்டாரவிடமும் 3 முன்னாள் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் 4 பிரதி பொலிஸ்மா அதிபர்களிடமும் விசாரணைக்குழுவினால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் மன்றுக்கு அறிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடமும் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, சில முன்னாள் அமைச்சர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார். இதேவேளை, பூஜித் ஜயசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு, கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த பிணை மனு தொடர்பில் எதிர்ப்பினை தெரிவிக்க கால அவகாசம் வழங்குமாறு இதன்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் நாயகம் திலீப பீரிஸ் கோரியுள்ளார். இதன்பிரகாரம், எதிர்வரும் ஜனவரி 9 ஆம் திகதி பிணை மனுவிற்கான எதிர்ப்பினைத் தெரிவிக்க பிரதிவாதிக்கு அனுமதி வழங்கிய நீதிபதி அன்றைய தினமே பிணை மனு மீள் பரிசீலனை செய்ய உத்தரவிட்டுள்ளார். பூஜித் ஜயசுந்தரவின் மகனின் திருமணம் எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி நடைபெறவுள்ளதால், அன்றைய தினம் காலை முதல் 60 மணித்தியாலங்களுக்கு அவரை விடுவிக்க இடைக்கால உத்தரவொன்றை பூஜித் ஜயசுந்தர சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அநுர மெத்தேகொட மன்றில் கோரியுள்ளார். கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்ககரவாதத் தாக்குதலைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை, கடமைகளை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.