சுவிஸ் தூதரக அதிகாரி விவகாரம் தொடர்பில் அறிக்கை

சுவிட்சர்லாந்து வௌிவிவகார நடவடிக்கை திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கை

by Staff Writer 17-12-2019 | 8:52 AM
Colombo (News 1st) சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சித்து, அந்நாட்டு வௌிவிவகார நடவடிக்கை திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. உண்மைக்குப் புறம்பான தகவல்களை வௌியிட்டதாகக் குற்றஞ்சுமத்தி, சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியைத் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துவதை தாம் கண்டிப்பதாக திணைக்களம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும்போது நாட்டின் நீதி மற்றும் சர்வதேச தரத்திற்கு அமைய, குறித்த அதிகாரியின் தனிப்பட்ட உரிமைகள் பாதுகாக்கப்படுவதுடன் அதனை உறுதி செய்வது இந்நாட்டு நீதிமன்றத்தின் பொறுப்பாகும் எனவும் சுவிட்சர்லாந்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தூதரக அதிகாரி சார்பில் தாம் தொடர்ந்தும் முன்னிற்பதாகவும் அவருக்காக தாம் இயன்றவளவான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் சுவிட்சர்லாந்து வௌிவிவகார நடவடிக்கை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கை ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்கும் நாடு என நற்பெயரைக் கொண்டுள்ள இந்தத் தருணத்தில், குறித்த தூதரக அதிகாரியின் உடல்நல பாதிப்பு தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அறிக்கையூடாக வலியுறுத்தியுள்ளது. இந்தப் பிரச்சினை குறித்து மத்தியஸ்த மற்றும் ஆக்கபூர்வ நடவடிக்கைகளை எதிர்ப்பார்ப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து தூதரக அதிகாரியின் விடயம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் சுவிட்சர்லாந்து வௌிவிவகார நடவடிக்கை திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய செய்திகள்