கட்சி ஆதரவாளர்களை சந்திக்க கிராமங்கள் தோறும் பயணிக்கப்போகும் சஜித்

by Staff Writer 17-12-2019 | 9:35 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி கூறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்புத் தொடர் இன்று ஆரம்பமானது. மக்களின் அமோக வரவேற்பிற்கு மத்தியில் முதலாவது மக்கள் சந்திப்பு கொலன்னாவையில் இன்று நடைபெற்றது. மக்களின் ஆதரவோடு நடைபெற்ற இந்த மக்கள் சந்திப்பை ஐக்கிய தேசியக் கட்சியின் கொலன்னாவை தொகுதி அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் S.M.மரிக்கார் ஏற்பாடு செய்திருந்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாச, தேர்தல் பின்னடைவிற்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக விரிவான கூட்டணி ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் வெற்றியீட்டுவதற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் சஜித் பிரேமதாச கூறினார். அரசியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கும் பழிவாங்கல்களுக்கும் இலக்கான மக்களுக்காக தாம் முன்நிற்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார். இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த மக்கள் சந்திப்புத் தொடர் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு திரட்டுவதற்காக கூட்டங்கள் நடைபெற்ற 154 தேர்தல் தொகுதிகளிலும் நடைபெறவுள்ளது.