சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி கைது

by Staff Writer 16-12-2019 | 6:43 PM
Colombo (News 1st) கொழும்பில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் இன்று (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் கடத்திச் செல்லப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியான கானியா வெனிஸ்டர் பிரான்சிஸை கைது செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு இன்று மாலை சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியிருந்தார். பொய் சாட்சியம் வழங்கியமை தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளரும் சட்டமா அதிபரின் இணைப்பதிகாரியுமான அரச சிரேஷ்ட சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார். சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி இன்று ஆறாவது நாளாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகினார். இன்று காலை 9 மணியளவில் அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானதுடன் 3 நிமிடங்களில் அங்கிருந்து வௌியேறியதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானதை தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகளுக்காக அவர் அங்கொடை தேசிய உளநல மருத்துவ சேவை பிரிவிற்கு அழைத்து செல்லப்பட்டார். கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதன்முறையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார். கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தெடர்பில் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராவதுடன், அவர் கடந்த நாட்களில் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திலும் முன்னிலைப்படுத்தப்பட்டார். சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவு எதிர்வரும் 17ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.