கட்சிக்கு புதிய முகங்கள் வேண்டும் - ரணில் விக்கிரமசிங்க

by Staff Writer 16-12-2019 | 10:01 PM
Colombo (News 1st) குருநாகல் மாவட்டத்தின் பிரதிநிதிகளை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று (16) சிறிகொத்தவிற்கு அழைத்திருந்தார். குருநாகல் மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் இன்று காலை சிறிகொத்த கட்சி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டனர். கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் இவர்களுடன் கலந்துரையாடினர். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின்போது சரியான முறையில் வேலை செய்தால் சிறந்த பெறுபேற்றினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவ்வாறு பெற வேண்டுமாயின் நாம் அனைவரும் ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும் எனவும் ஒன்றிணைந்து வேலை செய்யாவிட்டால் வெற்றி பெற முடியாது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். நாம் கிராமங்களுக்கு செல்ல முடியாது என கூறும் அமைப்பாளர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் இருப்பார்களாயின் அவர்களை விலக்கிவிட்டு புதியவர்களுக்கு இடமளிக்க வேண்டும். மேலும் மதகுருமார்கள், மத்திய வர்க்கத்தினர் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு இன்றி தமக்கு கிராமங்களுக்கு செல்ல முடியாது என அவர் இதன்போது குறிப்பிட்டார். கட்சிகளுக்கும் தனி நபர்களுக்கும் இடையிலான போட்டி இங்கு காணப்படுகின்றதாகக் கூறிய ரணில், அதற்கு தீர்வினைக்கண்டால் தமக்கு அவர்களின் ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார். அத்துடன், கட்சிக்கு புதிய முகங்கள் மற்றும் தலைவர் தேவைப்படுவதாகவும் 2025 ஆம் ஆண்டாகும்போது தாம் பலமான கட்சியாக இருக்க வேண்டும் அதற்கு கட்சியில் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் ரணில் விக்கிரமசிங்க கூறினார். இதில் தொடர்ந்து இருக்கும் எண்ணம் தனக்கு இல்லை என கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கருத்து தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்