ஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரராக பென் ஸ்டோக்ஸ்

ஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை சுவீகரித்தார் பென் ஸ்டோக்ஸ்

by Staff Writer 16-12-2019 | 5:13 PM
Colombo (News 1st) BBC வருடாந்த விருது வழங்கல் விழாவில் ஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) சுவீகரித்துள்ளார். BBC வருடாந்த விருது வழங்கல் விழா ஸ்கொட்லாந்தில் நடைபெற்றது. மக்களின் விருப்பு வாக்குகளின் மூலமாக BBC வருடாந்த விருது வழங்கல் விழாவில், ஆண்டின் அதிசிறந்த விளையாட்டு வீரர் தெரிவுசெய்யப்படுகிறார். இங்கிலாந்து முதல் தடவையாக உலகக்கிண்ணத்தை சுவீகரிப்பதற்கு பாரிய பங்காற்றிய பென் ஸ்டாக்ஸ் ஆண்டின் அதிசிறந்த வீரர் விருதை தட்டிக்கொண்டார். இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான அன்ட்ரூ ப்ளின்டொப் 2005 ஆம் ஆண்டு இந்த விருதை வென்றிருந்தார். அதற்கு பின்னரான 14 வருடங்களில் BBC இன் ஆண்டின் அதிசிறந்த வீரர் விருதை எந்தவொரு கிரிக்கெட் வீரரும் வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மக்களின் விருப்பு வாக்குகளின் மூலம் இந்த விருதுப்பட்டியலில் போர்மியூலாவன் உலக சம்பியனான பிரித்தானியாவின் லூவிஸ் ஹெமில்ட்டன் இரண்டாமிடத்தையும் இங்கிலாந்தின் ஓட்டப்பந்தய வீராங்கனையான Dina Asher-Smith மூன்றாமிடத்தையும் அடைந்துள்ளனர். இங்கிலாந்து கால்பந்தாட்ட அணியின் ரஹீம் ஸ்ரேலிங், 7 அம்ச போட்டிகளில் உலக சாதனையாளராகத் திகழும் Katarina Johnson ஆகியோர் இந்த விருதுக்கான பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இளவரசி Anne மற்றும் ஸ்கொட்லாந்து கால்பந்தாட்ட வீரரான Denis Law ஆகியோர் ஆண்டின் அதிசிறந்த வீரர் விருதை பென் ஸ்டோக்ஸுக்கு வழங்கினர்.