சுகததாச நிர்வாகக் குழுவிற்கு எதிராக வழக்கு

சுகததாச விளையாட்டரங்கின் நிர்வாகக் குழுவிற்கு எதிராக வழக்கு

by Staff Writer 15-12-2019 | 8:23 AM
Colombo (News 1st) சுகததாச விளையாட்டரங்கின் நிர்வாகக் குழுவிற்கு எதிராக, கொழும்பு மாநகர சபை வழக்கு பதிவு செய்துள்ளது. சுகததாச விளையாட்டரங்கில் நுளம்புக் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதால், நிர்வாகக் குழுவிற்கு எதிராக வழக்கு பதிவு செய்ததாக சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார். கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையிலேயே நுளம்புக் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 13ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவிற்காக நேபாளத்திற்கு சென்றிருந்த இலங்கை வீர, வீராங்கனைகள் சிலர் டெங்குக் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்தே, சுகததாச விளையாட்டரங்கு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. குறித்த விளையாட்டு விழாவிற்கு செல்வதற்கு முன்னர் இந்த வீர, வீராங்கனைகள் சுகததாச விளையாட்டரங்கின் விடுதிகளில் தங்கியிருந்துள்ளனர். இதேவேளை, கொழும்பு நகரிலுள்ள மைதானம், விளையாட்டுக் கழகம் மற்றும் மைதானத் தொகுதிகள் ஆகிய 23 பகுதிகளில் கொழும்பு மாநகர சபை மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள், பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளனர். இவற்றில் நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 4 இடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.