V-Force: இரத்தினபுரியில் மரநடுகை செயற்றிட்டம்

by Staff Writer 14-12-2019 | 8:20 PM
Colombo (News 1st) மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத வனப்பகுதிக்கு புத்துயிரூட்டும் நோக்கில் இரத்தினபுரியில் மரநடுகை செயற்றிட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. மக்கள் சக்தி V-Force படையணியினால் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளை தலைமையாகக் கொண்டு நாட்டில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்திய V-Force படையணியினால், இரத்தினபுரி - வரக்காகொட பாலத்திற்கு அருகில் மர நடுகைத் திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. மண் அரிப்பைக் குறைத்தல், வௌ்ளப் பாதிப்பைக் குறைத்தல் என்பன மர நடுகைத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். எட்டு குழுக்களால் வரக்காகொட பாலத்திற்கு அருகில் மரக்கன்றுகள் நடப்பட்டன. சமயத் தலைவர்கள், இரத்தினபுரி பிரதேச செயலக அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், மகாராஜா இன்ஸ்டிட்யூட் ஒஃப் மெனேஜ்மன்ட் நிறுவனத்தின் மாணவர்கள் உள்ளிட்ட பல சமூக ஆர்வலர்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த மரநடுகை திட்டத்தில் பல அமைப்புகளும் V-Force உடன் இணைந்துள்ளதுடன், MAS இன்டிமேட்ஸ் நிறுவனம் இதற்கான நிதிப்பங்களிப்பை வழங்கியுள்ளது. அத்துடன் செஞ்சிலுவை சங்கம், பொலிஸ் உயிர்ப் பாதுகாப்புப் பிரிவு, ஹரித உதய தேசிய அமைப்பு ஆகியனவும் V-Force உடன் இணைந்துகொண்டன.