ராஜித சேனாரத்னவிற்கு எதிராக முறைப்பாடு

ராஜித சேனாரத்னவிற்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு

by Staff Writer 14-12-2019 | 4:47 PM
Colombo (News 1st) முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக தேசிய சுதந்திர முன்னணி நேற்று (13) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளது. நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை தொடர்பிலான நடவடிக்கைகளின் போது 30 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான அரச நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகத் தெரிவித்து இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப்பேச்சாளர் மொஹம்மட் முஸ்ஸம்மில் உள்ளிட்டோர் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிலேயே இந்த குற்றச்சாட்டை பதிவு செய்ய உத்தேசித்திருந்தனர். நிதிக்குற்ற விசா​ரணைப் பிரிவினர் குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொஹம்மட் முஸ்ஸம்மில் உள்ளிட்டோர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை கட்டடம் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் அரசுடைமையாக்குவதற்காக 2017 ஜூலை 5 ஆம் திகதி கிடைத்த அமைச்சரவை அனுமதிக்கு எதிராக செயற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களத்தினால் வௌியிடப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.