சட்டவிரோத மணல் அகழ்வு: சித்தார்த்தன் கடிதம்

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் சித்தார்த்தன் ஜனாதிபதிக்கு கடிதம்

by Staff Writer 14-12-2019 | 4:37 PM
Colombo (News 1st) சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு கடிதம் எழுதியுள்ளார். கிளிநொச்சியின் பளை, மருதங்கேணி, கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை நிறுத்துமாறு கடிதத்தினூடாகக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணல் கொண்டு செல்வதற்கான சட்ட நடைமுறையில் மாற்றம் கொண்டு வந்ததன் பின்னர் சட்டவிரோத மணல் அகழ்வு அதிகரித்துள்ளதாகவும் பகல் , இரவு என தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெறுவதாகவும் கடிதத்தில் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். நாளாந்தம் நூற்றுக்கணக்கான டிப்பர்கள் எவ்வித பிரச்சினையுமின்றி மணல் ஏற்றிச்செல்வதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு தொடருமாயின் இயற்கை சமநிலை குன்றுவதுடன், கிராம மக்கள் குறித்த செயற்பாடுகளை நிறுத்துவதற்கு முன்னெடுக்கும் நடவடிக்கையால் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் நிலை உருவாகலாம் எனவும் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.