இந்தியாவிற்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

இந்தியாவின் வட, கிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

by Bella Dalima 14-12-2019 | 8:07 PM
Colombo (News 1st) இந்தியாவின் வட, கிழக்கு மாநிலங்களுக்கு செல்ல வேண்டாம் என அமெரிக்கா, பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் தமது பிரஜைகளுக்கு அறிவித்துள்ளன. இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுப்பெற்று வருவதால் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது. இந்திய குடியுரிமை திருத்த சட்டமூலம் மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலின் பின்னர் சட்டமாகியுள்ளது. இந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வட கிழக்கு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அசாமில் ஊரடங்கு சட்ட உத்தரவை மீறி மக்கள் வீதிகளில் இறங்கி நேற்று போராட்டம் நடத்தியுள்ளதுடன், இதன்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்ததாக பி.பி.சி செய்தி வௌியிட்டுள்ளது. அத்துடன், போராட்டக்காரர்கள் தாக்கியதில் 7 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்திற்கான ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக பி.பி.சி செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, குடியுரிமை திருத்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமைக்கு எதிராக திரிபுராவிலும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. போராட்டக்காரர்கள் வீதிகளில் டயர்களை எரித்துள்ளதுடன் வாகனங்கள் சிலவும் தீக்கிரையாக்கப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியுரிமை திருத்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து புதுச்சேரியில் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர், காமராஜர் சிலை அருகில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உருவ பொம்மையை எரிப்பதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்ட சந்தர்ப்பத்தில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக 'த ஹிந்து' செய்தி வௌியிட்டுள்ளது.