MCC உடன்படிக்கையை அரசாங்கம் மீளாய்வு செய்வதாக உயர் நீதிமன்றில் அறிவிப்பு

by Staff Writer 13-12-2019 | 3:49 PM
Colombo (News 1st) MCC உடன்படிக்கையை அரசாங்கம் மீளாய்வு செய்வதாக சட்ட மா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று அறிவித்துள்ளது. இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட அரசாங்கம் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை எனவும் சட்ட மா அதிபர் திணைக்களம் மன்றுக்கு அறிவித்துள்ளது. MCC உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹாரே, எல்.ரி.பி. தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ்.துறைராஜா மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் மன்றுக்கு ஆஜராகிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் MCC உடன்படிக்கை தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து மன்றுக்கு அறிவித்தார். இதன் பின்னர் இந்த மனு மீதான பரிசீலனை எதிர்வரும் மார்ச் மாதம் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.