by Staff Writer 13-12-2019 | 8:49 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவை டிசம்பர் 20ஆம் திகதிக்கு முன்னர் கூட்டுமாறு 26 உறுப்பினர்களின் கையொப்பத்துடன், கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் முக்கிய பதவிகளுக்கான நியமனங்கள், நாட்டின் தற்போதைய அரசியல் நிலை குறித்து கலந்துரையாடப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு 26 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக 20 ஆம் திகதிக்கு முன்னர் செயற்குழுவைக் கூட்டுமாறு கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச இறுதித் தருணத்திலேயே வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுடன், ரணில் விக்ரமசிங்கவே ஐக்கிய தேசியக் கட்சிக்கு தலைமை தாங்கினார்.
கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவிற்கு வழங்காமல் பொதுத்தேர்தலில் போட்டியிடக்கூடாது என ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கட்சியின் முற்போக்குக் குழு தொடர்ந்தும் வலியுறுத்தியது.
பதவி விலகுவதற்கு ரணில் விக்ரமசிங்க தயாராகவுள்ளதாக ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.
பொதுச்செயலாளர் இந்தக் கருத்தைக் கூறி சில நாட்களின் பின்னர், ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவத்தில் தொடர்ந்தும் நீடிப்பதாகத் தெரிவித்தார்.
இதற்கமைய, லக்ஷ்மன் கிரியெல்ல, வஜிர அபேவர்தன, பேராசிரியர் ஆஷூ மாரசிங்க, தலதா அத்துக்கோரள, ரஞ்சித் மத்துமபண்டார, மலிக் சமரவிக்ரமவைக் கொண்ட குழு, மறுசீரமைப்பிற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்டது.
எனினும், பொதுத்தேர்தலில் களமிறக்கப்படும் பிரதமர் வேட்பாளர் கட்சியின் தலைவராக இருக்க வேண்டும் என நேற்று (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் தலதா அத்துக்கோரள, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் சுட்டிக்காட்டினர்.
இந்த நிலைப்பாட்டை அறிவித்த பின்னர் அவர்கள் குழுவிலிருந்து விலகியுள்ளனர்.
இந்த நிலையில், கட்சியின் ஏனைய உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, வஜிர அபேவர்தன, ஆஷூ மாரசிங்க ஆகியோர் நேற்று அறிக்கையொன்றை வௌியிட்டனர்.
பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு குறித்த குழு இணங்கியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.