by Staff Writer 13-12-2019 | 8:30 PM
Colombo (News 1st) உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் வரையறைக்குள் கட்டுப்படுத்தப்படும் தேவை இலங்கைக்கு இல்லை எனவும் ஏனைய நாடுகளிடம் நட்பை எதிர்பார்க்கும் அதேவேளை, ஆதிக்கம் செலுத்துவதை நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
ஜப்பான் வௌிவிவகார அமைச்சரை இன்று முற்பகல் சந்தித்த போதே ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
வலய ஒத்துழைப்பு தொடர்பில் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்திய ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் டொஷிமிட்சு மொடேகி (Toshimitsu Motegi) சுதந்திர, பகிரங்க இந்திய - பசுபிக் வலய எண்ணக்கரு குறித்து ஜப்பானுக்குள்ள அர்ப்பணிப்பை சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை என்பன பிராந்திய ஒத்துழைப்பில் முக்கிய பங்கு வகிப்பதாக, ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஜப்பான் வௌிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்பொருட்டு இந்து சமுத்திர வலயம் நெருக்கடிகளற்ற அமைதியான பிராந்தியமாகக் காணப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கூறியுள்ளார்.
இலங்கையில் இனங்களுக்கு இடையிலான சமாதானம், ஸ்திரத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தை பலப்படுத்துவதற்காக தாம் முன்நிற்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கத்திற்கான அரசியல் செயற்பாடுகள், பொருளாதார அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் என்பன குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையை சூழவுள்ள கடற்பிராந்தியம் இலங்கைக்கே உரித்தானது என்பதை மறந்து பல வருடங்களாக இந்து - பசுபிக் கடற்பிராந்தியம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகின்றமை சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
பிரித்தானியாவின் காலனித்துவத்தின் கீழ் இந்தியா, பாகிஸ்தான் பிரிக்கப்பட்டதன் பின்னர், சுதந்திரம் வழங்கப்பட்டதன் ஊடாக இந்த வலயம் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தம் புலனாகின்றது.
நாட்டிற்கேயுரிய பொருளாதார வலயமான, இலங்கையின் நிலப்பரப்பை விட 9 மடங்கு அதிகமான அந்தப் பகுதி இலங்கை கடற்பரப்பென அழைக்கப்பட வேண்டும்.
சர்வதேச சட்டத்திற்கமைய, இந்த கடற்பரப்பு இலங்கையின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழுள்ளது.
இதனை உலகின் பலம்வாய்ந்த நாடுகள் ஏற்றுக்கொள்வதற்கும் மதிப்பளிப்பதற்குமான சந்தர்ப்பம் தற்போது உதயமாகியுள்ளது.
அத்துடன், ஹொங்காங்கில் நடைபெற்றதைப் போன்று ஒரு நாடு இரு தேசம் எனும் எண்ணக்கருவை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கு பலம்வாய்ந்த நாடுகள் அழுத்தம் பிரயோகிக்கக்கூடாது.