2018,2020-இற்கான சிறப்பு ஊடக விருது வழங்கல் விழா

2018, 2020 ஆம் ஆண்டுகளுக்கான சிறப்பு ஊடக விருது வழங்கல் விழா

by Staff Writer 12-12-2019 | 12:21 PM
Colombo (News 1st) 2018, 2020 ஆம் ஆண்டுகளுக்கான சிறப்பு ஊடக விருது வழங்கல் விழா நேற்றிரவு (11) கல்கிஸ்ஸயில் நடைபெற்றுள்ளது. இலங்கை பத்திரிகை ஆசிரியர்களால் 1998ஆம் ஆண்டிலிருந்து இந்த விருது வழங்கல் விழா நடத்தப்பட்டு வருகின்றது. வாழ்நாளில் ஒரு தடவை மாத்திரம் வழங்கப்படும் விருது, 40 வருடங்களுக்கும் அதிக காலம் ஊடகவியலாளராகக் கடமையாற்றிய 10 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், சிறந்த ஊடகவியலாளருக்கான மேர்வின் டி சில்வா ஊடகவியலாளர் விருது, 'வீரகேசரி' பத்திரிகையின் ஆர். ராம்குமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. சிறந்த விவரணக் கட்டுரைக்கான விருதை வீரகேசரியின் ரொபட் அன்டனி பெற்றுள்ளார். விசேட நிலைமைகளின் போதான அறிக்கையிடலுக்கான விருது, 'மவ்பிம' பத்திரிகையின் சாமர மதுஷங்கவிற்கு வழங்கப்பட்டதுடன், புலனாய்வு செய்தி அறிக்கையிடலுக்கான விருதை 'மவ்பிம' தினசரி பத்திரிகையின் பிரகீத் சம்பத் கருணாதிலக பெற்றுக்கொண்டார். டென்சில் பீரிஸ் இளம் ஊடவியலாளருக்கான விருதை, சண்டே டைம்ஸின் மந்திரா விஜேரத்ன பெற்றுக்கொண்டார். வருடத்தின் சிறந்த கேலிச்சித்திரக் கலைஞர்களாக, அஞ்சன இந்திரஜித், மதுஷங்க அமரசிங்க மற்றும் டொன் வீரரத்ன ஆகியோர் கௌரவிக்கப்பட்டுள்ளனர். வருடத்தின் சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருதை, 'சிலோன் டுடே' பத்திரிகையின் தாரக ருவன்சிறி பஸ்நாயக்க பெற்றுள்ளார்.