இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: இலங்கை 6 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்கள்

by Staff Writer 12-12-2019 | 7:34 PM
Colombo (News 1st) இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் இன்றாகும். ராவல்பிண்டியில் நடைபெறும் போட்டியில் 5 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்களுடன் இலங்கை அணி இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது. தனஞ்சய டி சில்வா 38 ஓட்டங்களுடனும் நிரோஷன் திக்வெல்ல 11 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை தொடர்ந்தனர். இவர்கள் இருவரும் 6 ஆவது விக்கெட்டிற்காக 67 ஓட்டங்களைப் பொறுமையாக பகிர்ந்தனர். தனஞ்சய டி சில்வா டெஸ்ட் அரங்கில் ஆறாவது அரைச்சதத்தை எட்டினார். இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 222 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது மழை காரணமாக ஆட்டம் சுமார் 4 மணித்தியாலங்கள் தடைப்பட்டது. மீண்டும் போட்டி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நிரோஷன் திக்வெல்ல 33 ஓட்டங்களுடன் வெளியேறினார். இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 263 ஓட்டங்களை பெற்றிருந்த போது போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் மீண்டும் தடைப்பட்டது. போட்டி சுமார் 1 மணித்தியாலம் தடைப்பட்ட நிலையில், இன்றைய ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக நடுவர்கள் அறிவித்தனர். தனஞ்சய டி சில்வா 72 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். போட்டியில் இன்றைய இரண்டாம் நாளில் 18.3 ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டன. பாகிஸ்தான் மண்ணில் 10 வருடங்களின் பின்னர் டெஸ்ட் தொடரொன்று நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.