ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை வழங்க காலக்கெடு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகளை வழங்க கால அவகாசம்

by Staff Writer 12-12-2019 | 11:25 AM
Colombo (News 1st) கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைகளை தேசிய சுவடிகள் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 1,337 முறைப்பாடுகள் தொடர்பில் சுமார் 25,000 பக்கங்கள் கொண்ட அறிக்கைகள் காணப்படுவதாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இவற்றை ஒழுங்குபடுத்தி தேசிய சுவடிகள் காப்பகத்திடம் கையளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்தது. அதுவரையான காலப்பகுதியில் ஆணைக்குழுவிற்கு கிடைத்த 1,346 முறைப்பாடுகளில் 29 முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளன. இதற்கான அறிக்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி கையளிக்கப்பட்டது. மக்கள் வங்கியை டிஜிட்டல் மயமாக்கியபோது இடம்பெற்ற மோசடிகள், சுரக்‌ஷா காப்புறுதி மோசடி, சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி உள்ளிட்ட 29 சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.