ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு அரச வேலைவாய்ப்பு 

ஒரு இலட்சம் இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்ள அமைச்சரவை தீர்மானம்

by Staff Writer 12-12-2019 | 8:13 PM
Colombo (News 1st) ஒரு இலட்சம் இளைஞர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. சாதாரண தரத்திற்கும் குறைவான கல்வித் தகைமை கொண்டவர்களை அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது. 6 மாதங்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சியை நிறைவு செய்யும் இளைஞர், யுவதிகளுக்கு பயிற்சி பெற்ற துறைக்கு ஏற்ப அரச வேலைவாய்ப்புகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரண குறிப்பிட்டார். பல்நோக்கு மேம்பாட்டு பணிக்குழு என்ற பெயரில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அதற்கான திணைக்களம் இயங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை, நாட்டில் தற்போது காணப்படும் 374 தேசிய பாடசாலைகளை ஆயிரமாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அத்துடன், பல்கலைக்கழக அனுமதிக்காக கணக்கிடப்படும் Z Score முறையில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில், தற்போது காணப்படும் மாவட்ட ரீதியான முறைமைக்கு பதிலாக பாடசாலை ரீதியான முறைமையை அமுல்படுத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டு, அதனூடாக புதிய முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு உயர் தர பரீட்சையில் இருந்து புதிய முறைமையை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும் தெரிவித்தார்.