அரச காணிகளை முகாமைத்துவம் செய்யும் திட்டம் MCC-இன் தாக்கமா?

அரச காணிகளை முகாமைத்துவம் செய்யும் திட்டம் MCC-இன் தாக்கமா?

எழுத்தாளர் Staff Writer

12 Dec, 2019 | 8:44 pm

Colombo (News 1st) 480 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்கொடையாகக் கிடைக்கும் என கூறப்படும் MCC உடன்படிக்கை தொடர்பில் மீண்டும் விவாதம் வலுப்பெற்றுள்ளது.

உடன்படிக்கைக்கான சட்டமூலம் ஆராயப்படுவதாக அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, மக்களுக்கு நன்மையெனக் காண்பித்து MCC உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தும் நிலை காணப்படுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உத்தேச MCC உடன்படிக்கையுடன் தொடர்புடைய முக்கிய விடயங்கள் மக்களுக்கு வௌிப்படுத்தப்படவில்லை என டெய்லி FT பத்திரிகை இன்று செய்தி வௌியிட்டிருந்தது.

இதனால் இலங்கை பிரஜைகளின் நன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

MCC நிதியத்தைப் பெற்றுக்கொள்வதற்கான அறிக்கையைத் தயாரிக்கும் செயற்பாட்டில் இலங்கையின் எந்தவொரு பல்கலைக்கழகமோ அல்லது நிபுணரோ தொடர்புபடவில்லை என பொருளாதார ஜனநாயகத்திற்கான கூட்டமைப்பை மேற்கோள்காட்டி பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் மேம்பாட்டிற்கு ஏற்பட்டுள்ள தடைகளைத் திரிவுபடுத்தி சுட்டிக்காட்டி இந்த நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு முயற்சிக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

MCC உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு, சீன – அமெரிக்க பூகோள அரசியல் போராட்டத்தில் த​லையிடுவது நாட்டின் இறைமையிலும் தாக்கம் செலுத்தும் என டெய்லி FT செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணி தொடர்பான சட்டத் திருத்தங்கள் உள்ளிட்ட விடயங்கள் மற்றும் போக்குவரத்து அபிவிருத்திக்காக இந்த நிதி வழங்கப்படுவதாக MCC நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அரச காணி முகாமைத்துவத்தை விரைவுபடுத்தும் செயற்றிட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இன்று தகவல் வௌியானது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன சமர்ப்பித்தார்.

அரச காணி தரவுகளை முறையாக்குதல், புதிய வீதி வரைபடத்தை வௌியிடல், காணி கச்சேரிகளை நடத்துதல், கொடுப்பனவு அனுமதிப்பத்திரம் மற்றும் முறிகளை வழங்குதல், காணியுரிமையை வழங்குதல் உள்ளிட்ட 11 விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள காணிகளுக்கு கட்டணம் அறவிடப்படும் முறைமையை இலகுபடுத்தல் தொடர்பில் ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்