மூதூரில் டெங்கு காய்ச்சலால் யுவதி பலி

மூதூரில் டெங்கு காய்ச்சலால் யுவதி பலி

by Staff Writer 11-12-2019 | 5:59 PM
Colombo (News 1st) மூதூர் - அல்லைநகரில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். 18 வயதான யுவதி ஒருவரே டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு நேற்றிரவு உயிரிழந்ததாக மூதூர் பொது சுகாதார வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி தெரிவித்தார். சடலம் தொடர்ந்தும் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இதுவரை தமது பிரிவில் 350 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொது சுகாதார வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி கூறினார். இவர்களில் அதிகளவானோர் ஆனைச்சேனை மற்றும் அல்லைநகர் பகுதிகளை சேர்ந்தவர்கள் என அவர் தெரிவித்தார். இதனிடையே, திருகோணமலை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 1733 பேர் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வார காலப்பகுதியில் மாத்திரம் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு 136 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.