சுவிஸ் தூதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிப்பு

by Staff Writer 11-12-2019 | 7:49 PM
Colombo (News 1st) கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸை நாளைய தினம் (12) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கடந்த மூன்று நாட்களாக வாக்குமூலம் பதிவு செய்தது. கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திடம் பெறப்பட்ட அனுமதிக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் மீண்டும் அவர் வாக்குமூலம் வழங்கவுள்ளதுடன், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் நாளை நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படவுள்ளது. இதேவேளை, நேற்றிரவு கூடிய ஆளுங்கட்சியின் கட்சித் தலைவர் கூட்டத்திலும் இந்த சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமது தூதுவரை சுவிட்சர்லாந்து மீள அழைத்துள்ளதாகக் கூறப்படும் தகவல் தொடர்பில் சுவிட்ஸர்லாந்து வௌிவிவகார அமைச்சிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. அவ்வாறு வௌியாகும் தகவல்கள் போலியானவை என அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார். கொழும்பில் தனது இராஜதந்திர செயற்பாடுகளை தூதுவர் முன்னெடுத்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.