இந்திய குடியுரிமை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு

சர்ச்சைக்குரிய இந்திய குடியுரிமை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு: 10 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம்

by Staff Writer 11-12-2019 | 8:00 PM
Colombo (News 1st) சர்ச்சைக்குரிய இந்திய குடியுரிமை சட்டமூலம் தொடர்பில் இந்திய மாநிலங்கள் அவையில் தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தியாவின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றுள்ளது. சர்ச்சைக்குரிய இந்திய குடியுரிமை சட்டமூலம் மாநிலங்கள் அவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்றினார். சுமார் 12 மணி நேர விவாதத்திற்கு பின்னர் குடியுரிமை திருத்த மசோதா, மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட நிலையிலேயே மாநிலங்கள் அவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மூலம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படாது என்பதால் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, குடியுரிமை சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம், திரிபுரா, மேகாலயா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இரண்டாவது நாளாகவும் போராட்டங்கள் தொடர்கின்றன. மக்களின் எதிர்ப்பை கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்காக இந்தியாவின் கவுத்தி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு தற்போது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சர்ச்சைக்குரிய இந்திய குடியுரிமை சட்டமூலம் தொடர்பில் இந்திய மாநிலங்கள் அவையில் தொடர்ந்தும் விவாதம் இடம்பெற்று வருகிறது.