அரச நிறுவனங்களை அரச கட்டடங்களுக்கு மாற்ற ஆலோசனை

அரச நிறுவனங்களை அரசிற்குரிய கட்டடங்களுக்கு மாற்றுமாறு ஆலோசனை

by Staff Writer 11-12-2019 | 8:37 AM
Colombo (News 1st) தனியார் கட்டடங்களில் முன்னெடுக்கப்படும் அமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்களை, அரசாங்கத்திற்கு உரித்தான கட்டடங்களுக்குக் கொண்டுசெல்லுமாறு ஆலோசனை கிடைத்துள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. தனியார் கட்டடங்களில் அரச நிறுவனங்கள் நடாத்தப்பட்டு வருவதால், மேலதிகமாக செலவுகள் ஏற்படுவதாக அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாரச்சி கூறியுள்ளார். தற்போது வரை சில அமைச்சுகள் மற்றும் அமைச்சின் சில பிரிவுகள், சில அரச நிறுவனங்கள், தனியார் கட்டடங்களில் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறான கட்டடங்கள் தொடர்பிலான தகவல்களை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்ட சில கட்டடங்களின் ஒப்பந்தங்கள் நிறைவுபெறாதமையால் அவை தொடர்ந்தும் அரச நிறுவனங்களாக முன்னெடுக்கப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.