அமைச்சர்களுக்கான விடயதானங்கள் தொடர்பான விசேட வர்த்தமானி வௌியீடு

அமைச்சர்களுக்கான விடயதானங்கள் தொடர்பான விசேட வர்த்தமானி வௌியீடு

எழுத்தாளர் Staff Writer

11 Dec, 2019 | 11:22 am

Colombo (News 1st) கடந்த அரசாங்கத்தில் இடர்முகாமைத்துவ அமைச்சிற்கு உரித்தான பல நிறுவனங்கள், இம்முறை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இன்று (11) அதிகாலை வௌியிடப்பட்டுள்ள அமைச்சர்களுக்கான விடயதானங்கள் தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பொறுப்புகள் மற்றும் விடயங்கள் பகிரப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 43-1 ஆவது பிரிவு மற்றும் 46-1 ஆவது பிரிவு ஆகியவற்றின் பிரகாரம், அமைச்சர்களுக்கு உள்ளடங்கும் விடயங்கள், செயற்பாடுகள், திணைக்களங்கள், நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான அமைப்புகள் ஆகியன இவ்வாறு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

இதனபடிப்படையில், இடர்முகாமைத்துவ நிலையம், தேசிய இடர் நிவாரண சேவை நிலையம் வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் ஆகிய பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதனைத்தவிர, ஆட்சி பதிவுத் திணைக்களம், குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், தேசிய ஔடத கட்டுப்பாட்டு நிலையம் ஆகியனவும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய ஊடக மத்திய நிலையம், அரச சார்பற்ற அமைப்புக்களுக்காக செயலகம், இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையம், இலங்கை கணினி அவசர அழைப்புப் பிரிவு, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களும் ரக்னா லங்கா பிரைவட் லிமிட்டட் நிறுவனமும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் படை பிரதானிகளின் அலுவலகம், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை, பொலிஸ், சிவில் பாதுகாப்பு திணைக்களம், அரச புலனாய்வு சேவை, இராணுவ சேவை அதிகார சபை, சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், கட்டளை அதிகாரி பாதுகாப்பு சேவை கல்லூரி, தேசிய மாணவர் படையணி, தேசிய பாதுகாப்பு நிதியம் ஆகியனவும் பாதுகாப்பு அமைச்சின கீழுள்ளன.

நிதி, பொருளாதார மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ், திறைசேரி, மத்திய வங்கி, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் அனைத்து அரச வங்கிகள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள் உட்பட 48 நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புத்த சாசன, கலாசார மற்றும் மத விவகார அமைச்சின் கீழ் அனைத்து மத விவகாரத் திணைக்களங்கள், தொல்பொருள் மற்றும் கலாசார அலுவல் திணைக்களங்கள் ஆகியன வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவை திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சகத்தின் கீழ் வர்த்தமானி செய்யப்பட்டுள்ளன.

அரச தகவல் திணைக்களம், அரசாங்க அச்சுத் திணைக்களம் மற்றும் அரச ஊடக நிறுவனங்கள் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்