MCC தொடர்பில் பரிசீலிப்பு; தீர்மானம் இலங்கை அரசிடமே இருப்பதாக அமெரிக்கா தெரிவிப்பு

by Staff Writer 10-12-2019 | 8:23 PM
Colombo (News 1st) MCC எனப்படும் Millennium Challenge Corporation உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு உரிய தினமோ, கால வரையறையோ இல்லை என இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. நியூஸ்ஃபெஸ்ட் இது தொடர்பில் மின்னஞ்சல் மூலம் வினவிய போது தூதரகம் இதனை குறிப்பிட்டது. அந்த விடயம் தற்போது இலங்கை அரசாங்கத்துடன் தொடர்புபட்ட விடயம் என அமெரிக்க தூதரகம் பதில் அளித்தது. காணி உரிமை தொடர்பிலான திட்டங்களை தொடர்ந்தும் விஸ்தரித்தல் மற்றும் பொது போக்குவரத்து வசதிகளை நவீனமயப்படுத்தலுக்காக அமெரிக்காவின் Millennium Challenge Corporation ஊடாக 480 மில்லியன் டொலர் நிதி உதவியை பெற்றுக்கொள்ளும் திட்டம் கடந்த அரசாங்கக் காலத்தில் முன்வைக்கப்பட்டது. தற்போது ஆட்சிக்கு வந்த அரசாங்கம் அவ்வேளையில் எதிர்க்கட்சியில் இருக்கும் போது இதனை கடுமையாக விமர்சித்ததுடன் ஜனாதிபதி தேர்தல் பிரசார மேடையில் இது பிரதான தலைப்பாக மாறியது. ஜனாதிபதி தேர்தல் காலத்தில் உடுதும்பர - காசியப்ப தேரர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். கடந்த அரசாங்கம் கைச்சாத்திட்ட அனைத்து உடன்படிக்கைகளையும் தான் ஆட்சிக்கு வந்தவுடன் மீள ஆராய்வதாகவும் உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் அவர் கோரியிருந்தார். அதன்படி, இந்த உடன்படிக்கை மீள் பரிசீலிக்கப்படுவதாக வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இன்று தெரிவித்தார். உடன்படிக்கையில் சட்டமூலத்தை ஆராய்வதற்கு அரசாங்கத்திற்கு கால அவகாசம் தேவை என MCC நிறுவனத்திற்கு புலப்படுவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்தது. உடன்படிக்கை தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடுவதற்கு தயார் எனவும் எந்தவொரு பிரச்சினையையும் தீர்த்துக்கொள்வதற்கான சந்தர்ப்பம் இருப்பதாகவும் அமெரிக்க தூதரகம் குறிப்பிட்டது. எவ்வாறாயினும், தற்போது அரசாங்கத்தின் பங்காளர்கள் இந்த உடன்படிக்கை தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டில் இருந்தனர். எவ்வாறாயினும், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் கடுமையான நிலைப்பாட்டில் இருந்த சிலரின் நிலைப்பாடு தற்போது மாற்றமடைந்துள்ளமையை காண முடிகின்றது. இத்திட்டத்தில் 70 வீதத்திற்கும் அதிகமானவை போக்குவரத்துடன் தொடர்புடையவை எனவும் 30 வீதத்திற்கும் குறைவாகவே காணி மறுசீரமைப்பு திட்டங்கள் காணப்படுவதாகவும் பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.