ரஷ்யாவும் யுக்ரைனும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்

ரஷ்யாவும் யுக்ரைனும் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்

by Chandrasekaram Chandravadani 10-12-2019 | 9:09 AM
Colombo (News 1st) இந்த ஆண்டின் இறுதிப் பகுதியிலிருந்து முழுமையானதும் வினைத்திறன் மிக்கதுமான போர் நிறுத்தத்தை யுக்ரைனின் கிழக்குப் பகுதியில் நடைமுறைப்படுத்துவதற்கு யுக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணக்கம் வௌியிட்டுள்ளன. நேற்றைய தினம் பாரிஸில் இடம்பெற்ற இருநாட்டு ஜனாதிபதிகளுக்கு இடையிலான நேரடிப் பேச்சுவார்த்தையின் போது இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை, பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளின் அரச தலைவர்களின் மத்தியஸ்த்தத்துடன் இடம்பெற்றிருந்தது. அதனடிப்படையில், பிரெஞ்ச் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரொன் மற்றும் ஜேர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோரும் இந்தப் பேச்சுவார்த்தையில் இணைந்து கொண்டிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றதுடன், முக்கியத்துவம் வாய்ந்த 3 பிராந்தியங்களிலிருந்து யுக்ரைனிய இராணுவத்தினர் வௌியேறியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. யுக்ரைன் ஜனாதிபதி விளோடிமிர் ஸெலென்ஸ்கியின் இராணுவ மற்றும் இராஜதந்திர நகர்வுகள் சமாதானத்தைப் பாதுகாப்பதை இலக்காகக் கொண்டிருந்தாலும் எதிர்க்கட்சியினரால் பாரிய விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.