மாவனல்லை பிரதேச சபை உறுப்பினர் கடத்தல்

by Staff Writer 10-12-2019 | 7:56 PM
Colombo (News 1st) மாவனல்லை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் பிரதேச சபை வளாகத்தில் வைத்து இன்று காலை கடத்திச்செல்லப்பட்டுள்ளார். மாவனல்லை பிரதேச சபையின் அமர்வு இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது. இதில் கலந்துகொள்வதற்காக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சந்தன ருவன் குமார சென்ற போது அவர் கடத்தப்பட்டுள்ளார். கடத்தியவர்கள் அவரை நண்பகல் 12 மணியளவில் ஹிங்குல்ல பிரதேசத்தில் விட்டுச்சென்றுள்ளனர். இதனையடுத்து, அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினரான சந்தன ருவன்குமாரவே கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். கைத்துப்பாக்கிகளை தலையில் வைத்து தம்மை அச்சுறுத்தியதாகவும் பிரதேச சபைக்கு செல்ல வேண்டாம் என வற்புறுத்தியதாகவும் சந்தன ருவன்குமார குறிப்பிட்டார். இதேவேளை, அவர் கடத்தப்படவில்லை எனவும் பண கொடுக்கல் வாங்கல் காரணமாகவே இவ்விடயம் இடம்பெற்றதாகவும் மாவனல்லை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கே.ஜி.பியதிஸ்ஸ தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் மாவனல்லை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.