பண்டிகைக் காலத்தில் நிவாரண விலையில் அரிசியை விநியோகிக்க அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம்

by Staff Writer 10-12-2019 | 9:26 PM
Colombo (News 1st) பண்டிகைக் காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனிடையே பலத்த மழை காரணமாக பெரும்போக செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்னரே பெரும்போக செய்கை ஆரம்பிக்கப்பட்டது. எனினும், நாட்டின் பல பகுதிகளில் தொடரும் பலத்த மழையுடனான வானிலை காரணமாக பல ஏக்கர் பயிர் நிலங்கள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. இந்த நிலையில், சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளது. நவம்பர் மாதம் முதல் வாரத்தில் ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 95 ரூபாவாகக் காணப்பட்டாலும், தற்போது 115 ரூபாவாக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது, பண்டிகைக் காலத்தில் நிவாரண விலையில் அரிசியை விநியோகிக்க அரிசி ஆலை உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்ததாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. ஒரு கிலோகிராம் நாட்டரிசி 98 ரூபாவிற்கும் சம்பா ஒரு கிலோகிராம் 99 ரூபாவிற்கும் விற்பனை செய்ய இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை தொடக்கம் இந்த புதிய விலை திருத்தம் அமுல்படுத்தப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.