நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை

நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் மழை

by Staff Writer 10-12-2019 | 7:27 AM
Colombo (News 1st) மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்தநிலையில், நிலவும் அதிக மழையுடனான வானிலையினால் விவசாய அபிவிருத்தத் திணைக்களத்திற்கு சொந்தமான 38 சிறு குளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ​மேலும், 35,000 இற்கும் அதிக ஏக்கர் பயிர்ச்செய்கை நிலங்கள் அழிவடைந்துள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்திலேயே அதிகளவான விவசாய நிலங்கள் அழிவடைந்துள்ளன. மேலும், வவுனியா, மொனராகலை, அனுராதபுரம், அம்பாறை, புத்தளம், மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலும் பயிர்நிலங்கள் அழிவடைந்துள்ளன. இதனிடையே, 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. நுவரெலியா, கண்டி,மொனராகலை, இரத்தினபுரி, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் காணப்படுமென தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார். இதேவேளை, சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 9 பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் 1,425 குடும்பங்களைச் சேர்ந்த 4,893 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. கல்பிட்டி, புத்தளம், முந்தல், மகாகும்புக்கடவல, பள்ளம, சிலாபம், வண்ணாத்திவில்லு, நவகத்தேகம மற்றும் மகாவெவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட 177 பேர் இரண்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கான சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றன. இதேவேளை, மண்சரிவு அபாயம் காரணமாக மாத்தளை கம்மடுவ எலகல்ல தோட்டத்தில் இடம்பெயர்ந்த 26 குடும்பங்களை சேர்ந்த 72பேர் எலகல்ல விக்னேஷ்வரா தமிழ் வித்தியாலயத்தில் தொடர்ந்தும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் அம்பங்கங்க பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டு வருவதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.