கடத்தப்பட்ட சுவிஸ் தூதரக அதிகாரியிடம் மூன்றாவது நாளாக வாக்குமூலம் பதிவு

by Staff Writer 10-12-2019 | 9:07 PM
Colombo (News 1st) கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி இன்று மூன்றாவது நாளாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கினார். கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸ் இன்று காலை 9.30 அளவில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார். சுமார் 4 மணித்தியாலங்கள் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதுடன், பிற்பகல் 1.45 அளவில் அவர் இரண்டாவது நாளாக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்டார். கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். மருத்துவ பரிசோதனையின் பின்னர் மாலை 5 மணியளவில் தூதரக அதிகாரிகள் மீண்டும் அவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச்சென்றனர். கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கார்னியர் பெனிஸ்டர் பிரான்சிஸ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியதுடன், நேற்று முன்தினம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.