மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கவனயீனத்தால் உயிரிழந்த 14 வயது சிறுமி

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கவனயீனத்தால் உயிரிழந்த 14 வயது சிறுமி

எழுத்தாளர் Staff Writer

10 Dec, 2019 | 9:49 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுமி ஒருவர் உயிரிழந்தமைக்கான காரணம் அதிக செறிவுமிக்க மருந்து வழங்கப்பட்டமையே என வைத்தியசாலையின் பணிப்பாளர் கணேசமூர்த்தி கலாரஞ்சனி உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆரையம்பதி- காங்கேயனோடையைச் சேர்ந்த 14 வயதான சிறுமி இரத்தப்புற்றுநோய் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவில் கடந்த ஒரு வருடமாக மருத்துவ சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி வழமை போன்று சிகிச்சைக்கு வைத்தியசாலை சென்ற சிறுமி வழக்கத்திற்கு மாறாக அதிகளவு செறிவுமிக்க மருந்து ஏற்றப்பட்டதால் நேற்று மாலை உயிரிழந்தார்.

தனது பிள்ளைக்கு நேர்ந்த தவறு வேறு எவருக்கும் நடந்துவிடக் கூடாது என உயிரிழந்த சிறுமியின் தாய் வலியுறுத்திக் கூறினார்.

கடந்த 3 ஆம் திகதி புற்றுநோய் மருந்து ஏற்றப்படும் போது நிகழ்ந்த தவறு காரணமாக பக்கவிளைவுகள் ஏற்பட்டு, அதற்குரிய சிகிச்சை பலனின்றி நேற்று (9) மாலை சிறுமி உயிரிழந்ததாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்
கணேசமூர்த்தி கலாரஞ்சனி குறிப்பிட்டார்.

கவனயீனம் காரணமாக உயிரிழப்புகள் இடம்பெற்ற சில சம்பவங்கள் கடந்த காலங்களிலும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தவறான குருதி வழங்கப்பட்டதால், வந்தாறுமூலை பலாச்சோலை கிராமத்தை சேர்ந்த 9 வயதான விஜயகாந்த் விதுலக்ஷன் கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்தார்.

மட்டகளப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி பிரசவிக்கப்பட்ட குழந்தையொன்று உயிரிழந்தமை தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்