Colombo (News 1st) ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் அதனை சூழவுள்ள காணி 99 வருட குத்தகைக்கு சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 30ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, பீ. பத்மன் சூரசேன மற்றும் காமினி அமரசேகர ஆகியோர் அடங்கிய நீதியரசர் குழாம் இன்று மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது.
அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளமையால், விஜயதாச ராஜபக்ஸவின் மனுவில் பிரதிவாதி தரப்பை திருத்துமாறு நீதிமன்றம் இன்று கேட்டுக்கொண்டது.
இந்த வரிச் சலுகையிலுள்ள சட்டவிரோதத் தன்மையை நாம் ஆட்சேபனைக்கு உட்படுத்தியே இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளோம். சீன அரசாங்கத்திற்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகை சட்டவிரோதமானது என்பதால், அரசாங்கத்திற்கு முறையாகக் கிடைக்கவேண்டிய வரிச்சலுகையைப் பெற்றுக்கொள்வதே எமது எதிர்பார்ப்பாகும். இந்த விடயம் தொடர்பிலேயே இன்று இந்த வழக்கு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. எனினும், அமைச்சரவை மாற்றப்பட்டுள்ளதால் பிரதிவாதிகள் தரப்பு மனுவில் திருத்தப்பட வேண்டும் என்பதுடன், மார்ச் மாதம் 30ஆம் திகதியை வழக்கிற்கான தினமாக நீதிமன்றம் வழங்கியுள்ளது என சட்டத்தரணி சம்பத் பெரேரா தெரிவித்துள்ளார்.