ரஷ்யாவிற்கு 4 வருட போட்டித் தடை

ரஷ்யாவிற்கு 4 வருட போட்டித் தடை

by Staff Writer 09-12-2019 | 8:40 PM
Colombo (News 1st) சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு நிலையம் இன்று ரஷ்யாவுக்கு 4 வருட போட்டித் தடையை விதித்துள்ளது. இதன்மூலம், ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கான வாய்ப்பை ரஷ்யா இழந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு நிலையத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து தொடர்பிலான ஊழல்களை மறைக்கும் எண்ணத்தில் ஊக்கமருந்து பரிசோதனைகளுடன் தொடர்புடைய பெறுபேறுகளை அழித்தமை மற்றும் ஆய்வகத் தரவுகளை மாற்றி, போலியான சாட்சிகளை உள்ளீடு செய்தமை உள்ளிட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதன்படி, 2020 ஒலிம்பிக் விழா மற்றும் 2022 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்பந்தாட்டத் தொடர்களில் ரஷ்ய வீரர்களால் தமது தேசியக் கொடியின் கீழ் போட்டியிடும் வாய்ப்பு அற்றுப்போயுள்ளது.