தொடரும் மழையுடனான வானிலையால் மக்கள் பாதிப்பு

தொடரும் மழையுடனான வானிலையால் மக்கள் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2019 | 7:05 pm

Colombo (News 1st) சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டவர்களில், 2158 குடும்பங்களைச் சேர்ந்த 7106 பேர் தொடர்ந்தும் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

21 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 64 தற்காலிக நலன்புரி முகாம்களில் இவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சீரற்ற வானிலையால் 44,368 குடும்பங்களைச் சேர்ந்த 1,51,182 பேர் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

பதுளை, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பலத்த மழையுடனான வானிலை குறித்த மாவட்டங்களில் நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் புவிசரிதவியல் நிபுணர் கலாநிதி வசந்த சேனாதீர குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில், கண்டி மாவட்டத்தின் உடுதும்பரை, மெததும்பரை பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை, பசறை, லுணுகலை, எல்ல, ஹாலி எல, பதுளை, ஹப்புத்தளை, பண்டாரவளை, சொரணாதோட்டை, ஊவா பரணகம மற்றும் வெலிமடை பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, ஹங்குரன்கெத்த, நுவரெலியா, கொத்மலை மற்றும் அம்பகமுவ உள்ளிட்ட பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் புவிசரிதவியல் நிபுணர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

மெனராகலை மாவட்டத்தின் படல்கும்புற, பிபில மற்றும் மெதகம ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் , இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை மற்றும் இம்புல்பே பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

இந்த பகுதிகளில் மண்சரிவிற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக அங்கிருந்து வௌியேறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு உட்பட்ட 34 நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்துள்ளன.

இதன் காரணமாக நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழ்வோரை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் ஜனாகி மீகஸ்தென்ன கூறியுள்ளார்.

இதேவேளை, நாட்டின் தென் கிழக்கு, கிழக்கு மற்றும் தென் கடற்பிராந்தியங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வாகரை தொடக்கம் மட்டக்களப்பு, பொத்துவில், ஹம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையான கடற்பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தக் கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகளவும் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்