சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு

சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Staff Writer

09 Dec, 2019 | 2:38 pm

Colombo (News 1st) கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதுரக அதிகாரியான கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ்சிடம் 9 மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நீதிமன்றத்திற்கு இன்று (09) அறிவித்துள்ளனர்.

நேற்று மாலை 5.30 மணி தொடக்கம் இன்று அதிகாலை 2.30 மணி வரை அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

விசாரணைகளுக்காக குறித்த அதிகாரியிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவுசெய்ய வேண்டியுள்ளதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்போது குறித்த அதிகாரிக்கு விதிக்கப்பட்ட வௌிநாட்டு பயணத்தடையை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அதிகாரி பாலியல் துன்புறுத்தலுக்கோ, தாக்கதலுக்கோ இலக்காகியுள்ளாரா என்பது தொடர்பில் சட்ட மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பிரதம நீதவான் சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், அதிகாரியின் மனோநிலை தொடர்பிலும் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சுவிஸ் தூதரக அதிகாரியிடம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கு முன்னர் அவரை சட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

எனினும், பெண் வைத்தியர் இன்மையால் இந்த நடவடிக்கைக்கு அதிகாரி மறுப்பு தெரிவித்தாகவும் நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக இன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு சுவிஸ் தூதரக அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று சட்ட வைத்திய அதிகாரியிடம் அவர் முன்னிலைப்படுத்தப்படுவார் என குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மன்றுக்கு தெரிவித்துள்ளனர்.

கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளதாக அவர் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மன்றுக்கு கூறியுள்ளார்.

இதற்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச மருத்துவர்களின் அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தால் தமது கட்சிக்காரர் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும் கானியா வெனிஸ்டர் பிரான்சிஸ் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

எனினும், பாதிக்கப்பட்டவருக்கு எதிராகவே இதுவரை விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்துள்ளார்.

சுவிஸ் தூதரக அதிகாரிக்கு வௌிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளமையால், சம்பவம் தொடர்பான விசாரணையை துரிதமாக நிறைவு செய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்