தொடரும் கனமழையால் 163,000 பேர் பாதிப்பு

தொடரும் கனமழையால் 163,000 பேர் பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

07 Dec, 2019 | 8:11 pm

Colombo (News 1st) நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையால் 21 மாவட்டங்களில் 48,329 குடும்பங்களைச் சேர்ந்த 163,000-இற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட 4083 குடும்பங்கள் 113 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி சுட்டிக்காட்டினார்.

சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் நால்வர் உயிரழந்துள்ளதுடன், ஒருவர் காணாமற்போயுள்ளார்.

கிளிநொச்சியில் பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட வௌ்ளத்தினால் பன்னங்கண்டி கிராமத்தில் இருந்த 151 குடும்பங்களைச் சேர்ந்த 507 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இடம்பெயர்ந்தவர்கள் பன்னங்கண்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

சிவபுரம், பரந்தன் கிராமங்களில் இடம்பெயர்ந்த மக்கள் பரந்தன் சன சமூக நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 569 குடும்பங்களைச் சேர்ந்த 1349 பேர் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தர்மபுரம் மேற்கு பகுதியில் வௌ்ளத்தினால் இடம்பெயர்ந்த 268 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் புனித லூக்கா ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கனகாம்பிகை குளத்தை ஊடறுத்து ஆனந்தபுரத்தில் இருந்து இரத்தினபுரம் செல்வதற்காக நிர்மாணிக்கப்பட்ட கம்பிப் பாலம் வௌ்ளத்தில் அள்ளுண்டு சென்றுள்ளது.

தொடர் மழையினால் கிளிநொச்சி இரணைமடு குளத்தின் 14 வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. குளத்தின் நீர் மட்டம் 35 அடி 8 அங்குலமாக காணப்படுகின்றது. கனகாம்பிகை குளத்தின் நீர் மட்டம் 10 அடி 11 அங்குலமாக உயர்வடைந்துள்ளது.
அக்கராயன் குளத்தின் நீர் மட்டம் 25 அடி 2 அங்குலமாக அதிகரித்துள்ளது.

கிளிநொச்சியின் வௌ்ள நிலைமை தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரச அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

மழை வௌ்ளத்தினால் முல்லைத்தீவு மாவட்டமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 11 இடைத்தங்கல் முகாம்களில் 1174 குடும்பங்களின் 3585 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புதுக்குடியிருப்பு – கேரிமடு தற்காலிக முகாமில் 100 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவிலுள்ள 121 குளங்கள் தற்போது வான்பாய்கின்றன.

முத்தையன் கட்டு குளத்தின் நான்கு வான் கதவுகளும் தண்ணி முறிப்பு குளத்தின் மூன்று வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவின் அனைத்து கடல் நீரேரிகளினதும் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. எனினும் கொக்கிளாய், நாயாறு, வட்டுவாகல் கடல்நீரேரிகளின் ஊடாக தற்போது வௌ்ளம் வடிந்தோடி வருகின்றது.

நாயாறு கடல் நீரேரியின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளதால், செம்மலை மக்களின் புளியமுனை விவசாய நிலத்திற்கான தரைவழிப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

பரந்தன் – முல்லைத்தீவு A35 பிரதான வீதியின் வல்லிப்புனத்திலுள்ள பாலம் உடைந்துள்ளமையால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

போக்குவரத்தை சீர்செய்யும் நோக்கில் இராணுவத்தின் பொறியியல் பிரிவு தற்காலிக இரும்புப் பாலத்தை அமைக்கும் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகின்றது.

சீரற்ற வானிலையினால் யாழ்ப்பாணத்தில் 14 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 1158 குடும்பங்களைச் சேர்ந்த 6298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 குடும்பங்கள் 5 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

வௌ்ளத்தினால் மட்டக்களப்பின் 13 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 15,019 குடும்பங்களைச் சேர்ந்த 51,434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 736 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 15 தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு, கிரான் – பொன்டுகல்சேனை கணபதி வித்தியாலயத்திலும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலையின் 4 பிரதேச செயலகப்பிரிவுகளின் கீழுள்ள 826 குடும்பங்களின் 2721 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளத்தின் 9 பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த 1427 குடும்பங்களின் 4893 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்