4×100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் தெற்காசிய சாதனையுடன் தங்கம் வென்றது இலங்கை 

4×100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் தெற்காசிய சாதனையுடன் தங்கம் வென்றது இலங்கை 

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2019 | 9:37 pm

Colombo (News 1st) தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான 4X100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியில் புதிய தெற்காசிய சாதனையுடன் இலங்கை குழாம் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தது.

மகளிருக்கான பளுதூக்கல் போட்டியில் வட மாகாணத்தின் விஜயபாஷ்கர் ஆர்ஷிகா வெள்ளிப்பதக்கத்தை வெற்றி கொண்டார்.

தெற்காசிய விளையாட்டு விழாவில் ஆடவருக்கான 4X100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டி இன்று காலை நடைபெற்றது.

போட்டியில் இந்தியா , பாகிஸ்தான் பங்களாதேஷ், மாலைத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கை குழாம் பங்கேற்றது.

போட்டியில் இலங்கை வீரர்கள் அபாரமாக செயற்பட்டதுடன், புதிய தெற்காசிய சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சுவீகரித்தனர்.

போட்டி தூரத்தை இலங்கை வீரர்கள் 39.14 செக்கன்ட்களில் கடந்தனர்.

இதன் மூலம் கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தியாவால் படைக்கப்பட்ட தெற்காசிய சாதனை இலங்கை வீரர்களால் இன்று முறியடிக்கப்பட்டது.

ஹிமாஷ ஹேஷான் , வினோஜ் சுரஞ்சய, சானுக்க சந்தீப்ப மற்றும் யுபுன் பிரியதர்ஷன ஆகியோர் இந்த சாதனையைப் படைத்த இலங்கை குழாத்தை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

இதேவேளை, மகளிருக்கான 4X100 மீட்டர் அஞ்சலோட்டப் போட்டியிலும் இலங்கைக்கு தங்கப்பதக்கம் கிட்டியது.

போட்டியை இலங்கை குழாம் 44.89 செக்கன்ட்களில் கடந்தது.

லக்ஷிகா சுகந்தி, சாரங்கி சில்வா, சதீபா அன்டர்சன், அமாஷா டி சில்வா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்ற இலங்கை மகளிர் குழாத்தை பிரதிநிதித்துவப்படுத்தினர்.

13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் மகளிருக்கான பளுதூக்கல் போட்டியில் வட மாகாணத்தின் விஜயபாஷ்கர் ஆர்ஷிகா வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்தார்.

64 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்ட அவர், Snatch முறையில் 70 கிலோ அடங்கலாகவும் Clean and jerk முறையில் 100 கிலோ அடங்கலாகவும் மொத்தமாக 170 கிலோவை தூக்கினார்.

ஆர்ஷிகா இந்தப் போட்டியில் தூக்கிய 100 கிலோ எடையானது புதிய இலங்கை சாதனையாக பதிவானது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்