வித்தியா கொலை: மேன்முறையீட்டு விசாரணை ஒத்திவைப்பு

வித்தியா படுகொலை: குற்றவாளிகள் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

by Staff Writer 06-12-2019 | 4:20 PM
Colombo (News 1st) புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளும் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு மனு மீதான விசாரணையை அடுத்த வருடம் மே மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்து செய்து, தங்களை விடுதலை செய்யுமாறு கோரி சுவிஸ் குமார் என்றழைக்கப்படும் மகாலிங்கம் சசிகுமார் உள்ளிட்ட 7 குற்றவாளிகளாலும் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிரியந்த ஜயவர்தன, ப்ரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துறைராஜா ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேல் நீதிமன்ற நீதிபதிகளான பாலேந்திரன் சசிமகேந்திரன், மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மற்றும் அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஆகிய நீதிபதிகள் குழாமினால் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி ஏழு குற்றவாளிகளுக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.