ட்ரம்பை பதவி நீக்கும் வரைவிற்கு ஒப்புதல்

ட்ரம்பை பதவி நீக்கும் வரைவுத் தீர்மானத்தை உருவாக்க ஒப்புதல்

by Bella Dalima 06-12-2019 | 5:18 PM
Colombo (News 1st) அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான வரைவுத் தீா்மானத்தை உருவாக்க அந்நாட்டின் நாடாளுமன்ற கீழவையின் தலைவரும், ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவருமான நான்சி பெலோசி ஒப்புதல் அளித்துள்ளார். அவரது இந்த நடவடிக்கை, அதிபரை பதவி நீக்குவதற்கான நடைமுறையின் முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது. அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அதிபர் தோ்தலில் ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபா் ஜோ பிடன் போட்டியிடுவாா் என்று எதிர்பாா்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஜோ பிடனின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் அவருக்கு எதிராக ஊழல் விசாரணை மேற்கொள்ளுமாறு உக்ரைன் அரசை ட்ரம்ப் வலியுறுத்தியதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. உக்ரைனில் ஜோ பிடன் மற்றும் அவரது மகன் மேற்கொண்டு வரும் தொழில் தொடா்பாக அந்த விசாரணையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியதாகவும் உக்ரைனுக்கு நெருக்கடி தரும் வகையில் அந்த நாட்டு இராணுவத்திற்கான அமெரிக்க நிதியுதவியை நிறுத்தி வைத்ததாகவும் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தனது அரசியல் ஆதாயத்திற்காக தேசப்பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாகக் கூறி, டிரம்ப்பை பதவி நீக்கம் செய்வதற்கான விசாரணையை ஜனநாயகக் கட்சியினா் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், பதவி நீக்க தீர்மானத்தின் வரைவை உருவாக்க, நாடாளுமன்ற கீழவையின் தலைவா் நான்சி பெலோசி வியாழக்கிழமை (05) ஒப்புதல் அளித்தாா். இந்த நடவடிக்கையை மேற்கொள்வதைத் தவிர, வேறெந்த வாய்ப்பையும் டிரம்ப் அளிக்கவில்லை என்று பெலோசி குறிப்பிட்டுள்ளார்.