சீரற்ற வானிலையால் 45,858 பேர் பாதிப்பு; 4302 பேர் இடம்பெயர்வு

சீரற்ற வானிலையால் 45,858 பேர் பாதிப்பு; 4302 பேர் இடம்பெயர்வு

எழுத்தாளர் Staff Writer

06 Dec, 2019 | 8:43 pm

Colombo (News 1st) சீரற்ற வானிலை காரணமாக 13,542 குடும்பங்களை சேர்ந்த 45,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

1294 குடும்பங்களைச் சேர்ந்த 4302 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

732 வீடுகளுக்கு சேதமேற்பட்டுள்ளதாகவும் மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

வட மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகளில் நிலவும் பலத்த மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

நிலவும் மழையுடனான வானிலையினால் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பெருக்கெடுத்துள்ளது.

இதனால் இரத்தினபுரம், ஆனந்தபுரம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களை இராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

வௌ்ளத்தினால் கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை மண்டபத்திற்கு செல்லமுடியாது மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

மாணவர்களுக்கான படகு சேவைகளையும் இராணுவத்தினர் இதன்போது முன்னெடுத்தனர்.

கிளிநொச்சி செல்வ நகரிலிருந்து உருத்திரபுரம் பிரதான வீதியில் அமைந்துள்ள பாலம் வௌ்ளம் காரணமான சேதமடைந்துள்ளது.

அத்துடன், கிளிநொச்சி இரணைமடு குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 33 அடி​யை எட்டியதை அடுத்து, வான் கதவுகள் திறக்கப்பட்டன.

இரணைமடு குளத்தை அண்டிய பகுதிகளில் வாழும் கிராம மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதிக மழை வீழ்ச்சியாக முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியில் 186.5 மில்லிமீட்டர் பதிவாகியிருந்தது.

பலத்த மழையினால் முல்லைத்தீவு – பரந்தன் வீதியிலுள்ள பாலமொன்று உடைந்துள்ளது. கிளிநொச்சி – புதுக்குடியிருப்பு வீதியின் ஒரு பகுதி தாழிறங்கியுள்ளது.

முல்லைத்தீவு முத்தையன் கட்டு குளத்தின் 4 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

யாழ். தொண்டைமானாறு கடல் நீரேரியில் 10 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் தொண்டைமானாறு கடலின் நீர் மட்டமும் வழமைக்கு மாறாக உயர்ந்துள்ளது.

அச்சுவேலி, இடைக்காடு தொண்டைமானாறு வீதியின் குறுக்கே நிறைந்துள்ள வௌ்ளத்தினால் குறித்த வீதியூடான போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

யாழ். வலிகாமம் வடக்கு சேந்தாங்குளம் கிராமமும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.

யாழ். மல்லாகம் நீதவான் முகாமில் நிறைந்துள்ள வௌ்ளத்தினால் அங்குள்ள 50 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

யாழ். வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் குடியிருப்புகளிலும் வௌ்ளம் நிறைந்துள்ளது.

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியில் விவசாய நிலங்கள் முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மன்னார் – மடு, தட்சணாமருதமடு கிராமமும் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளது.

இதேவேளை, வௌ்ள நிலைமையினால் பாதிக்கப்பட்ட 134 குடும்பங்களை சேர்ந்த 3786 பேர் 45 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்