வடக்கில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு

by Staff Writer 05-12-2019 | 7:19 PM
Colombo (News 1st) வட மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்யும் மழை காரணமாக டெங்கு நோயின் தாக்கம் வெகுவாக அதிகரித்துள்ளது. யாழ். மாவட்டத்தில் நவம்பர் மாதத்திலிருந்து திடீரென டெங்கின் தாக்கம் அதிகரித்துள்ளது. வட மாகாணத்தில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6643 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஏ.கேதீஸ்வரன்தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் நான்கு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. யாழ். போதனா வைத்தியசாலையின் தரவுகளின் பிரகாரம் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 3349 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் மாத்திரம் 1549 டெங்கு நோயாளர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் டெங்கு பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை பணிப்பாளர் T.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இதேவேளை, டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி அருண ஜெயசேகர இன்று யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்று நிலைமைகளை பார்வையிட்டார். யாழ். நகரில் பரவி வரும் டெங்கினை கட்டுப்படுத்துவதற்கு யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் பொதுமக்களுக்கு அறிவித்தல் ஒன்றினை இன்று விடுத்துள்ளார். யாழ். மாநகர எல்லைக்குள் வசிக்கும் மக்கள் வீடுகளில் நுளம்பு பெருகக்கூடிய இடங்களை விரைவில் சுத்தப்படுத்துமாறும், பிளாஸ்டிக், பொலித்தீன், கண்ணாடிக் குவளைகள் மற்றும் இதர குப்பை கழிவுகளை உரிய முறையில் தரம் பிரித்து அகற்றுமாறும் யாழ். மாநகர முதல்வர் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். நீர் தேங்கும் கொள்கலன்களை அகற்றுவதற்கு மாநகர சபையின் வழமையான வட்டார திண்மக் கழிவகற்றல் நடைமுறையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சனிக்கிழமைகளில் இந்த கொள்கலன் கழிவுகளை வட்டார ரீதியாக அகற்றுவதற்கு விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 8 வயது சிறுமி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். கடந்த 3 ஆம் திகதி மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். மன்னார் - சின்னக்கடையை சேர்ந்த பாடசாலை மாணவியொருவரே உயிரிழந்துள்ளார்.