தேசிய கல்வியியல் கல்லூரிகளை தரம் உயர்த்த அனுமதி

தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழ​க பீடமாக தரம் உயர்த்த அமைச்சரவை அனுமதி

by Staff Writer 05-12-2019 | 3:19 PM
Colombo (News 1st) தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழ​க பீடமாக தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் இதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. ஜனாதிபதியின் கொள்கை பிரகடனத்திற்கு அமைய, நாட்டின் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை உரிய முறையில் அமுல்படுத்துவதற்கு குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளது. கல்வி மற்றும் உயர் கல்வி துறையை சேர்ந்த அதிகாரிகள் இந்த குழுவில் உள்ளடக்கப்படவுள்ளனர். இதேவேளை, கல்வி சேவைக்கான புதிய திட்டங்களை வகுப்பதற்கான குழுவை நியமிக்க அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், இந்த குழுவில் கல்வி துறைசார் வல்லுநர்கள் மற்றும் நிபுணர்கள் உள்ளடக்கப்படவுள்ளனர். தொழில் சேவைப் பிரச்சினைகளை துரிதமாக தீர்த்தல், சேவைகளை பாராட்டுவதற்கான முறை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் நிறைவேற்றுதல், தொழில் தன்மையை மேம்படுத்துதல், சேவை திருப்தியின் தன்மையை மேம்படுத்துவதன் மூலம் சிறந்த செயற்திறன் மிக்க சேவையை வழங்கக்கூடிய வகையில் இந்த குழு நியமிக்கப்படவுள்ளது. இதேவேளை, இராஜாங்க அமைச்சகங்களுக்கான செயலாளர்களை நியமிக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.