ஜனாதிபதியை சந்தித்த மாலைத்தீவு வௌிவிவகார அமைச்சர்

ஜனாதிபதியை சந்தித்த மாலைத்தீவுகள் வௌிவிவகார அமைச்சர்

by Staff Writer 05-12-2019 | 9:14 PM
Colombo (News 1st) மாலைத்தீவுகளின் வௌிவிவகார அமைச்சர் அப்துல்லா ஷாஹிட் (Abdulla Shahid) மூன்று நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ​மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார். நேற்றிரவு நாட்டிற்கு வருகை தந்த அவர், வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை இன்று சந்தித்தார். வௌிவிவகார அமைச்சில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இதேவேளை, அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவையும் அப்துல்லா ஷாஹிட் இன்று சந்தித்தார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை மாலைத்தீவின் வௌிவிவகார அமைச்சர் இன்று மாலை சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்து சமுத்திரத்தில் அனைத்து நாடுகளும் சுதந்திரமாக செயற்படுவது தொடர்பில், ஜனாதிபதி மற்றும் மாலைத்தீவின் வௌிவிவகார அமைச்சருக்கு இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டதாக ஊடகப் பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் சீனா மாத்திரமின்றி, ஜப்பான், அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளும் முதலீடுகளை மேற்கொள்ளலாம் என, சர்வதேச முதலீடுகள் தொடர்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார். எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியுள்ள வௌிவிவகார அமைச்சர், நாட்டின் மேல் மட்ட அதிகாரிகள் சிலரையும் சந்திக்கவுள்ளார்.