தனி நாட்டை உருவாக்கியுள்ள நித்தியானந்தா

தனி நாட்டை உருவாக்கியுள்ள நித்தியானந்தா; தனிக்கொடி, கடவுச்சீட்டும் அறிமுகம்

by Bella Dalima 04-12-2019 | 5:35 PM
Colombo (News 1st) மத்திய லத்தீன் அமெரிக்காவின் ஈக்வடோரில் உள்ள தீவை சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா வாங்கியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன. அத்தீவிற்கு தனிக்கொடி, தனி சின்னத்தை அவர் அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அதற்கு கைலாசா என்று பெயரிட்டு தனி நாடாக அறிவித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இத்தகவலை நித்தியானந்தாவில் ஆசிரமத்தினர் நடத்தி வரும் வலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளனர். நித்யானந்தா தனது யூடியூப் சேனலில் நேற்று (03) மாலை நேரலையில் ட்ரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு அருகிலுள்ள ஒரு தீவில் இருந்து சொற்பொழிவு நிகழ்த்தியுள்ளார். நித்தியானந்தாவின் கடவுச்சீட்டு காலாவதியான போதிலும், எவ்வாறு அவர் நாட்டை விட்டு வெளியேறினார் என்பது தொடர்பில் பொலிசார் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் தனது தீவிற்கென சொந்தக் கொடி அமைத்து அதற்கு ரிஷப துவஜா என்று பெயரிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் கடவுச்சீட்டில் இமயமலையில் நந்தியுடன் நித்தியானந்தா இருப்பது போன்ற சின்னம் உருவாக்கப்பட்டு, அதில் இது ஒரு இந்து நாடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை இழந்து உலகெங்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களால் உருவாக்கப்பட்ட எல்லைகள் இல்லாத நாடு என்று அந்நாடு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நாட்டில் கோவில் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு, மூன்றாம் கண்ணுக்கு பின்னால் உள்ள அறிவியல், யோகா, தியானம், குருகுலக் கல்விமுறை, உலகளாவிய இலவச சுகாதார அமைப்பு, இலவசக் கல்வி, இலவச உணவு மற்றும் அனைவருக்கும் கோவில் சார்ந்த வாழ்க்கை முறை வழங்கப்படும் என்று ஆசிரம வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் மொழிகளாக ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.