கொழும்பின் பல பகுதிகள் நீரில் மூழ்கின: இன்றும் நாளையும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்

by Bella Dalima 04-12-2019 | 4:32 PM
Colombo (News 1st) பலத்த மழை காரணமாக கொழும்பின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு - ஹோர்டன் பிரதேசம், விஜயராம வீதி, பேஸ்லைன் வீதி மற்றும் பௌத்தாலோக மாவத்தை உள்ளிட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் குறித்த பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இன்றும் நாளையும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 100 தொடக்கம் 150 மில்லிமீட்டர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பலத்த மழை காரணமாக 17 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தமது திணைக்களத்திற்குட்பட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது 62 வீதம் வரை அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், மழையுடனான வானிலையால் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி, பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.