இலங்கையில் இரண்டு அரசாங்கங்களை உருவாக்க பிரித்தானியா முயற்சி: கன்சர்வேட்டிவ் கட்சி மறுப்பு

by Staff Writer 04-12-2019 | 9:33 PM
Colombo (News 1st) பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இலங்கையில் இரண்டு அரசாங்கங்களை உருவாக்குவது தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயம் குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை வௌியிட்டு வருகின்றனர். இலங்கையின் நிர்வாகம் தொடர்பில் எதனையும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்வாங்கவில்லையென பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் பிரதி தவிசாளர் பால் ஸ்கலி (Paul Scully) ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நல்லிணக்கம், ஸ்திரத்தன்மை மற்றும் நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேசம் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பிரித்தானியாவின் இலங்கை உயர்ஸ்தானிகர் மனீஷா குணசேகர கன்சர்வேட்டிவ் கட்சியின் உப தவிசாளர் ஜேம்ஸ் கிளெவர்லிக்கு (James Cleverly) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இரண்டு அரசாங்கங்கள் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கப்படுமாக இருந்தால், அதனை ஒருபோதும் அனுமதிப்பதில்லையென அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.