by Staff Writer 04-12-2019 | 4:16 PM
Colombo (News 1st) சிலாபம் - முன்னேஸ்வரம் ஆலய பொறுப்பாளரிடம் 1,90,000 ரூபா இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் உதவி பொலிஸ் அத்தியட்சகரான ஆரிய கீர்த்தி பண்டார எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னேஸ்வரத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு வலம்புரி சங்குகள் கடந்த ஏப்ரல் மாதம் காணாமற்போயின.
அவற்றைக் கண்டுபிடிப்பதற்கு கோவில் பொறுப்பாளரிடம் இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.
உதவி பொலிஸ் அத்தியட்சகர் இலஞ்சம் பெற்றுக்கொண்ட போது கடந்த 22 ஆம் திகதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டார்.
உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு பிணை வழங்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பான கட்டளை எதிர்வரும் 13 ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என பிரதம நீதவான் அறிவித்துள்ளார்.
முறைப்பாட்டாளருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளனர்.