தாக்குதலுக்குள்ளான சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரி வௌிநாடு செல்லத் தடை

by Staff Writer 03-12-2019 | 7:10 PM
Colombo (News 1st) தடுத்து வைத்து அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியான காலியா பெரிஸ்ட் பிரான்சிஸ் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை வௌிநாடு செல்ல நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதேவேளை, குறித்த சுவிட்சர்லாந்து தூதரக அதிகாரியை எதிர்வரும் 9 ஆம் திகதிக்கு முன்னர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, சுவிட்சர்லாந்தின் இராஜாங்க செயலாளர் Pascale Baeriswyl அந்நாட்டிற்கான இலங்கை தூதுவர் கருணாசேன ஹெட்டியாரச்சியை அழைத்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வினவியுள்ளார். தூதரக அதிகாரியுடன் தொடர்புடைய சம்பவம் குறித்து தூதரகம் வழங்கிய தகவல்களுக்கு முரணான சாட்சியங்கள் என்னவென்பதை தௌிவுபடுத்துமாறு இந்த சந்திப்பின்போது இராஜாங்க செயலாளர் தூதுவருக்கு அறிவித்ததாக சுவிட்சர்லாந்தின் மத்திய வௌிவிவகார திணைக்களம் அறிவித்துள்ளது. சட்ட நடவடிக்கைகளின்போது எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு சுவிட்சர்லாந்து பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் இராஜாங்க செயலாளர் தூதுவரிடம் கூறியுள்ளார். இந்த சம்வத்துடன் தொடர்புடைய அதிகாரியின் உடல்நிலை காரணமாக அவரால் இன்னமும் வாக்குமூலமளிக்க முடியாதுள்ளதாக வௌிவிவகார திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணைகளை தாமதப்படுத்துவதற்கான எவ்வித தேவையும் இல்லை எனவும் தமது பணியாளர்கள் தொடர்பிலான பொறுப்பை மிகவும் நிதானத்துடன் கையாள்வதாகவும் சுவிட்சர்லாந்தின் மத்திய வௌிவிவகார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.