கோட்டாபயவிற்கான அறிவித்தல் இடைநிறுத்தம் நீடிப்பு

கோட்டாபய ராஜபக்ஸவிற்கான அறிவித்தலை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு

by Staff Writer 03-12-2019 | 3:48 PM
Colombo (News 1st) லலித், குகன் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில் சாட்சியமளிப்பதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பிறப்பிக்கப்பட்ட அறிவித்தலை இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு எதிர்வரும ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ருவன் பெர்னாண்டோ இந்த உத்தரவை இன்று பிறப்பித்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை இரத்து செய்யுமாறு கோரி லலித், குகனின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான நிலைப்பாட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் 30 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஸவின் சட்டத்தரணிகளுக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. லலித், குகன் ஆகிய இருவரும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் திகதி யாழ்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டது. எனினும், பாதுகாப்பு நிமித்தம் யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாது என கோட்டாபய ராஜபக்ஸவின் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி குறித்த அறிவித்தலை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.