பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

by Staff Writer 02-12-2019 | 7:37 PM
ஜனாதிபதி இந்தியாவில் இருந்து நாடு திரும்பி 48 மணித்தியாலங்களேனும் கடப்பதற்கு முன்னதாகவே பாகிஸ்தான் வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வந்துள்ளார்.   ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தில் நேற்றிரவு நாட்டிற்கு வருகை தந்த பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மொஹமட் குரேஷியை, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்றனர்.   தாம் பிரதமர் இம்றான் கானின் விசேட கடிதத்துடன் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் முதலில் வெளிவிவவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்து கலந்துரையாடினார். வெளிவிவகார அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதனையடுத்து பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி செயலகத்திற்குச் சென்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய சகோதரத்துவப் பிணைப்பை விரிவுபடுத்தி தொடர்ந்தும் பலப்படுத்துவதற்கு பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக இதன்போது பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். ''நீங்கள் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொள்ளும் வரை நாம் ஆர்வத்துடன் காத்திருக்கின்றோம்.'' என பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இந்த சந்திப்பின்போது தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. நிதி உதவிகளுக்கு அப்பால், இரு நாடுகளும் பரஸ்பர நன்மைகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தக, முதலீட்டு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானுக்கான வெற்றிலை ஏற்றுமதியை ஜனாதிபதி இதன்போது உதாரணம் காட்டியுள்ளார். போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்கு பாகிஸ்தானின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரிடம் ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.